இது காந்தி தேசம் தான்! நீங்கள் எந்த காந்தியை நினைத்துக் கேட்கிறீர்கள்?!


காந்தி தேசமாக இருந்தது  இந்த அறுபது ஆண்டுகளில் எப்படி மாறிப்போனது , உண்மையைச் சொல்லப்போனால் அதற்கும் முந்தின அறுபது வருடங்களில் எப்படி மிதவாதம் என்றபெயரில், ப்ரிடிஷ்காரர்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு சொற்பச் சலுகைகளிலேயே காலம் தள்ள விரும்பினவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கொஞ்சம் விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். கொஞ்சம் நேர்மையோடு ஆராய்ந்து எழுதப்பட்ட பக்கங்களாகவே, சமீப காலத்தில் ஜெயமோகன் காந்தியைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.


ஜெயமோகனின் இந்தப்பக்கங்களில், கடைசியாகக் காணப்படும் சுட்டி ஒவ்வொன்றும்  ஒரு விஷயத்தை முழுமையாக விவாதிக்க முயற்சிக்கிறது என்றே சொல்ல வேண்டும். உண்மையைத் தேடுபவர்கள், தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப் பக்கங்களைப் படிக்குமாறு அன்புடன் சிபாரிசுசெய்கிறேன்.


உலகத்தில் வேறெந்த அரசியல் தலைவருக்குமே இல்லாத ஒரு பெரும் தகுதி, பெருமை காந்தியிடம் இருந்தது. தேசத்தின் பலபகுதிகளுக்கும் சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையை, அவர்களுடைய எண்ணங்களை நேரடியாக அறிந்து கொண்ட ஒரே தலைவர் அவர். வேறு எவரும் தங்களுடைய மக்களை, காந்தியுடன் ஒப்பிடும்போது அவ்வளவு நெருக்கமாக அறிந்திருக்கவில்லை என்பது அன்றைக்கு மட்டும் அல்ல, இன்றைக்கும் உண்மையாக இருக்கிறது.


பிரித்தாளும் கலையிலும், எதற்கெடுத்தாலும் ஆயுதபலத்தோடு எதிர்ப்பை நசுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்த பிரிடிஷ் காட்டுமிராண்டித்தனத்தை காந்தி நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.ஜாலியன் வாலாபாக் மாதிரிக் கொடூரமான படுகொலைக்கு உள்ளாவதில் இருந்து தன் மக்களைப் பாதுகாப்பதில் எவ்வளவு தெளிவோடு இருந்தார் என்பது, உள்நோக்கத்துடனேயே இன்றைக்கு மறக்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. மறக்கடிப்பதோடு மட்டுமல்லாமல், அவருடைய வழிமுறைகளுக்கு இல்லாத உள் நோக்கங்களைக் கற்பித்து, விஷத்தையும் வெறுப்பையும் கக்குகிற பிரச்சாரங்களாகவே இன்றைக்கு நிறையப் பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


மொழி, இனம், சாதி என்று எதோ ஒன்றின் மீது வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குவதன் மூலமே போராட முனைவதில் எவ்வளவு அப்பாவி மக்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதில் தெளிவு இல்லாத பல போராட்டங்கள், இந்த நூற்றாண்டில் எவ்வளவு பரிதாபமாகத் தோல்வியுடனும் பெருத்த சேதத்துடனும் முடிந்து போயின என்பதை, வரலாற்றின் சமீபத்திய பக்கங்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்தாலே தெரியும்.


சுதந்திரம் அடைந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் உபயோகம் முடிந்து விட்டது, அதைக் கலைத்து விடலாம் என்பது காந்தியின் கருத்தாக இருந்தது. காந்தி சொன்ன இந்த ஒன்றை மட்டுமாவது காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி இருக்குமானால், இந்தியத் திருநாடு எப்பேர்ப்பட்ட விபத்துக்களில் இருந்து தப்பித்திருக்கும் என்பதை நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடிகிறது!

இங்கே இன்னொரு காந்தே, ஒரு ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்துக்குப் போனால், அங்கே இவருக்கு திடீர்ப் பாசம் தலித் மக்கள் மீது வந்துவிடும்! யாரோ ஒரு தலித் குடிசையில் தங்குவாராம்! இந்த இத்தாலியப் புனைகதை ராஜகுமாரன் வந்து தங்கினதால் அந்த மக்கள் வாழ்க்கையில் அற்புதங்களா நிகழ்ந்து விடும்? அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், என் வீட்டுக்கு ராஜகுமாரன் வந்தானே என்று மதி மயங்கிக் கிடப்பார்களாம்!


வேறு சிலருக்கு இந்த ஸ்டண்ட் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது! ஏனென்றால், நானே உங்களுக்கு ரட்சகனும் ஜீவிதமுமாய் இருக்கிறேன் என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், சிறு பான்மையினருக்கும் இதுநாள்வரை நல்ல மேய்ப்பனும் மீட்பனுமாய்த் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்ட தலைவர்கள், "ஐயோ! வடை போச்சே!ஆஹா!வடை போச்சே!" என்று புலம்பவும் புகையவும் ஆரம்பித்திருக்கிறார்கள்!




இங்கே சசி தரூர் என்று ஒரு அறிவுக் கொழுந்தைத் தெரியாத தனமாக மத்தியில் மந்திரியாகவும் ஆக்கித் தொலைத்து விட்டார்கள்! ஓணானை எடுத்து உள்ளுக்குள் விட்டுக் கொண்டு குத்துதே குடையுதே என்று பல்லக்குத் தூக்கிகள் பல்லவி பாட ஆரம்பித்து விட்டார்கள்! என்னதான் செய்து தொலைத்தார் அவர் என்று தெரியாமல் கேட்பவர்களுக்காக!

இந்திய அரசியலுக்கு இத்தாலி அளித்திருக்கும் அருட்கொடை சோனியா அம்மையாருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்படச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, விமானப் பயணத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்து ஸ்டண்ட் அடித்தார்! நம்மூர் ஆனா கூட வேறுவழியில்லாமல் இந்த ஸ்டாண்டை ரிப்பீட்டீய்ய்ய்னு அடிக்க வேண்டிவந்தது நினைவுக்கு வராவிட்டாலும் கூடப் பரவாயில்லை!
அறிவுக்கொழுந்து சசி தரூர் ட்விட்டரில் அடித்த கமென்ட் பொன்னெழுத்தில் பொறித்து சோனியா வீட்டு வாசலில், பிரதீபா சிங் படீல் வீட்டு வாசலில் மாட்டப்பட வேண்டியவை!






ட்விட்டர் பிரச்சினை ஓய்வதற்கு முன்னாலேயே தரூர் ரொம்ப ஜரூராக அடுத்த ஏவுகணையை வீசியிருக்கிறார். முந்தின தரம் ட்விட்டரில் நகைச்சுவையாகச் சொன்னதோ, உள்ளது உள்ளபடி சொன்னதோ தெரியாது, இந்தத் தடவை, கொஞ்சம் நியாயமும் தெரிகிறது!


'One of his (Gandhi's) principles became a slogan. Work is worship. I always found it somewhat ironic that we celebrate Mahatma Gandhi's birthday with a holiday. I think he would have wanted us to work even harder to honour his memory,' Tharoor said here on the 140th birthday of Bapu Friday.

'It's natural that we should work on Gandhi Jayanti instead of observing the day as a national holiday,' he added.



எதற்கெடுத்தாலும் விடுமுறை என்பது என்ன கலாசாரம்? ஆனால் இந்த நியாயமான கேள்வியை எதிர்கொள்ள எவருமே இங்கே தயாராக இல்லை என்பதும் கசப்பானஉண்மை!


ஆனால் மகாத்மா காந்தி இந்த போலியான சிக்கனம், ஆரவாரம், அரசியல் ஆதாயத்திற்காக அந்தர்பல்டிகள் எதையும் அடித்ததில்லை. தன்னை வெறுத்தவர்களோடும், எதிரியாக நினைத்தவர்களுடனுமே கூட சமரசமாகவும், சுமுகமாகவும் இருக்கக் கடைசி வரையில் முயற்சித்துக் கொண்டே இருந்தது, அவருடைய பலவீனமாகவும்அமைந்துபோனதில் அவருடைய குற்றம் ஏதுமில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.


காந்தியைப் பற்றி இங்கே நிறையத் தப்பும் தவறுமாக, அரைகுறையாக, விஷமத்தனத்தோடும், விஷம் கலந்தும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டு வருகின்றன. கோட்சே சுட்ட குண்டு ஒரு தடவை தான் காந்தியைச் சாகடித்தது! ஆனால், காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்களும் , காந்தீயக் கொள்கைகளையும் காந்தியின் வாழ்க்கையையுமே கொச்சைப் படுத்தி எழுதுகிறவர்கள், அவரை தினம் தினம் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்!


காந்தியை பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்த்து விட்டோம்! சுட்டி கொடுத்திருக்கும் பக்கங்களையும் படித்து விட்டு, உங்களுடைய கருத்து என்னவென்பதையும் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ள முடியுமானால், மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இந்தப்பக்கங்களைப் படிக்க வரும் வாசகர்களிடம் எனக்கு ஒரு மன வருத்தம் உண்டு, எதிரெதிர் கருத்துக்களையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக சுட்டிகளை நிறையக் கொடுத்ததுமே கூட, அவைகளைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவே! அப்படிப் போய்ப் படிக்கும் சில பேரும், தங்களுக்குத் தோன்றுவதென்ன என்பதைச் சொல்ல, பகிர்ந்துகொள்ள முன்வருவது இல்லை.

காந்தியைப் பற்றிப் பேசினோம்! அடுத்து, 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்! மறந்துபோன அல்லது மறக்கடிக்கப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

தயார் தானே!?




4 comments:

  1. தங்களின் கருதுக்கள் மிகவும் அருமை. காந்தியைப் பற்றின நல்ல கருத்துக்கள் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேருவது மிகவும் அவசியம்.
    தவறான பதிவு எழுதுவர்களை நாம் என்ன செய்ய முடியும், அது அவர்களின் கருத்துக்கள், நாம் எதாவது திட்டலாம் என்றால் வரும் நியாமான கோபத்திற்கு ஏற்றவாறு திட்ட இவர்களுக்கு பெருத்தமான தமிழிலில் தரம் கெட்ட வார்த்தைகள் இல்லை.மிகவும் தாழ்ந்த வார்த்தைகளை வீட தரம் கெட்டவர்கள். இவர்களின் காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை படிப்பது வீட படிக்காமல் இருப்பது நமது மனனிலையை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. ஆதங்கத்திற்கு ஆதரவு தரும் வாக்குக்கு நன்றி!

    இங்கே தமிழ்ப்பதிவர்கள் காந்தியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆக, பதிவுகளைப் படித்து என் மனநிலையைக் கெடுத்துக் கொள்வது என்பதும் இல்லை.

    என்னுடைய சிந்தனை இரண்டு கரைகளைத் தொட்டு ஓடுகிறது.

    முதலாவது, மிகச் சமீபத்திய வரலாறே இந்த அளவுக்கு மறக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் சொல்ல முடியுமானால், தொன்மையான வரலாற்றை எந்த அளவுக்குச் சேதப்படுத்த முடியும்?

    இரண்டாவது, எது எப்படி இருந்தாலும் உண்மை தேடுகிறவர்களுக்குக் கிடைக்கும் என்ற அனுபவ சத்தியத்தையாவது நாம் பிடித்துக் கொண்டு கரை சேரப் பிகிரோமா அல்லது இல்லையா என்பது.

    ReplyDelete
  3. //இங்கே தமிழ்ப்பதிவர்கள் காந்தியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆக, பதிவுகளைப் படித்து என் மனநிலையைக் கெடுத்துக் கொள்வது என்பதும் இல்லை.
    //

    வலைப்பதிவர்கள் அனைவருமே கைதேர்ந்த எழுத்தாளர்கள் கிடையாது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் வார இதழ்களே சீசனுக்குத்தான் எழுதுகின்றன. தொடக்க நிலை எழுத்தாளர்களான வலைப்பதிவர்களிடம் வரையரை எதையும் வைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  4. வாங்க கண்ணன்!

    வலைப்பதிவர்கள் எல்லாம் தேர்ந்த எழுத்தாளர்கள் கிடையாது, உண்மைதான்! அதே மாதிரி எழுவது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது கூட முடியாது தான்! நீங்கள் சொல்வது எழுத்துநடை, எழுதத் தேர்ந்தெடுக்கும் விஷயம் இந்த மாதிரி என்றால், மிகவும் சரி!

    நான் சொல்ல வருவது அது அல்ல!

    கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில், ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய புத்தகத்தின் மீதான விவாதங்களில் எனக்கும் ஒரு பேராசிரியருக்கும் நடந்த ஒரு விவாதத்தையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாமே. காஞ்சா எலையா என்பவர் எழுதிய 'நான் என் ஒரு இந்து இல்லை?' என்ற பிரசுரத்தின் மீது ஒரிஜினலாக எழுதியவருடைய கருத்தை விட, அதை முன்கூட்டியே ஒரு முடிவு செய்துகொண்டு, அதற்குத் தகுந்த மாதிரி சாட்சியங்களை ஜோடிக்கிறமாதிரி, அந்த விவாதம் போன போது உண்மையிலேயே எரிச்சலாக இருந்தது. இந்த விவாதங்களை ஒட்டி எழுந்த சிந்தனைகளை என்னுடைய பதிவுகளில் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில் பார்க்க முடியும்.

    இங்கே வலைப்பக்கங்களில் என்று நண்பர் பித்தனுக்குச் சொன்னது இணையத்தில் காணக் கிடைக்கும் காந்தியைப்பற்றிய அவதூறுகளையும் உள்ளடக்கினது தான்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!