உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!


ஒரு தசாப்தம் என்று, இருபத்தோராவது நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியப் போகிற தருணம் இது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் எத்தனையோ நிகழ்வுகள்! சிறு காற்றாக, செய்தித்தாளைச் சரசரக்க வைத்து விட்டுப் போனதில் இருந்து, சுனாமியாகப் புறப்பட்டு, பேரழிவாக ஆயிரக் கணக்கான மக்களைக் காவுகொண்ட இயற்கை உற்பாதங்கள், ஈரான் , அடுத்து ஈராக், அப்புறம் ஆ ஃப்கானிஸ்தான், இப்படிப் புதைகுழிக்குள் சிக்கிக் கொண்ட மாதிரித் தொடர்ந்து யுத்தங்களில், மனித உயிர்களையும், உழைப்பையும் விரையம் செய்துகொண்டே போகும் அமெரிக்கா, வங்கிகளின் பேராசையால் சரிவைத் தொட்ட அமெரிக்க நிதித்துறை, முதலீடுகள் உள்நாட்டில் இருந்து மட்டுமே என்றிருந்த நிலை மாறி, வெளிநாட்டு நேரடி மூலதனம் எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவீட்டின்படி மட்டுமே, ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதைத் தீர்மானித்த பொருளாதார மேதைகள் எல்லாம் முகத்தில் கரியைப் பூசிக் கொண்ட கதையாகிப் போன கதை, கெட்டவனோடு சேர்ந்தவனும் கேட்டான், ஒதுங்கி நின்றவனுமே கூடக் கெட்டான் என்ற கதையாக, துபாய் உலகம், மேற்கத்திய முதலீடுகளை வாரிக் குவித்து, ஊதாரித்தனமாக என்னென்ன செய்தது என்பதே தெரியாத நிலையில், நாடு விட்டு நாடு போய் நாலு காசு பார்க்கலாமே என்ற கனவுகளோடு, கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரியே நடத்தப்பட்ட, உழைத்தவர்கள் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உண்டாக்கினது என்று இப்படி, சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள், நம்முடைய வாழ்க்கையை, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, தீர்மானிப்பவைகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன.


அப்படி இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டு சந்தித்த முக்கியமான செய்திகள், நிகழ்வுகளைப் பட்டியலிடும் போது, மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, புறக்கணிக்க முடியாத செய்தியாக, சீனா பொருளாதார ரீதியாக சூப்பர் வல்லரசாக வளர்ந்திருக்கும் செய்தி முதல் இடத்தில் இருக்கிறது. தன்னுடைய சூப்பர், சுப்ரீம், அல்டிமேட் அந்தஸ்தை, சீனா தெளிவாகவே உலகுக்குப் புரிய வைக்கும் விதமாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தி முடித்ததில் இருந்து, கிட்டத்தட்ட அதே நேரம், வெள்ளப் பெருக்கில் ஏராளமான உயிர்ச்சேதம் பொருட்சேதம் சீனாவில் ஏற்பட்ட போதும் கூட, சீன அரசு அதைத் திறம்பட நிர்வகித்தது (அல்லது, அதைப்பற்றிய செய்திகள் வெளியே வராமல், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தின சாதுர்யம், பப்ளிசிட்டியில் இருந்து கவனம் திசை திரும்பி விடாமல் பார்த்துக் கொண்ட சாமர்த்தியம் !)


சென்ற அக்டோபர் முதல் தேதி, நாடு சீன மக்கள் குடியரசாக மலர்ந்த அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டு, ராணுவ வலிமையிலும் சளைத்தவர்கள் இல்லை என்ற செய்தியை மிகத் திறம்பட வெளிப்படுத்தியது, இப்படி, சீனா எல்லா வகையிலுமே, தன்னுடைய வலிமையை, தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

இதை இந்தப் பதிவிலும், அடுத்து வந்த சில பதிவுகளிலும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!


கடந்த ஓராண்டாகவே, சீன அச்சுறுத்தலைப் பற்றி, சீனப்பூச்சாண்டி காட்டி நிறைய செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஈழப் பிரச்சினையில் கூட, சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, இந்திய அரசுக்குச் சீனப் பூச்சாண்டி காட்டி நிறைய தமிழ்ப் பதிவுகள்! இப்போது கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பதிவுகளைப் பார்க்க முடிகிறது. இந்தியாவுக்குச் சீனாவால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைப் பற்றி, இந்தியர்களை விட, இந்தப் பதிவுகளில் அதிகமாகவே அக்கறை பொங்கி வழிந்தது போல ஒரு மாயை!

இந்தியாவுக்குச் சீனா பூச்சாண்டி காட்டுகிறதா? சீன அச்சுறுத்தல் உண்மைதானா? இந்திய அரசு, அரசியல்வாதிகள், மக்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்பதை பேசுவதன் முன்னோட்டமாகத் தான், 1962 ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர், நேருவின் அயலுறவுக் கொள்கையில் இருந்த பலவீனம், ஒரு உறுதியான தலைமையின் அவசியம் என்று அடுத்தடுத்த பதிவுகள் வந்தன.

"
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! போர்மேகங்கள் சூழ்ந்து வந்தாலும்
 
எதிர் கொள்வதற்கு எங்களுக்கும் தெரியுமே! ஒன்றுபட்டு நிற்போம்!
 
உறுதியும் உரமும் உள்ளதோர் தலைவன் இருக்கிறான்! கலங்காதே! "
இப்படி, ஒரு எம் ஜி ஆர் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடி, ஆறுதல் தான் கொள்ள முடியுமா?
"சீனா இப்படி சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருப்பது இப்போதுள்ள சர்வதேசச் சூழலைப் புரட்டிப் போட்டிருக்கிறது! இனிவருங்காலத்திலும் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும்" என்கிறார் பால் ஜே ஜே பயக். குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற அமைப்பின் தலைவர் இவர்.

இந்தப் பத்தாண்டில் மிக அதிகமாகப் படிக்கப் பட்ட செய்தி, ஈராக்குடனான போர், எட்டு வருடங்களுக்கு முன்னாள் செப்டம்பர் 11 அன்று, நியூ யார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் இப்படிப் பரபரப்பான செய்திகளையெல்லாம் தாண்டி முதல் இடத்தைப் பிடித்த செய்தி, சீனா, ஒரு சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கிற செய்தி தான்,என்கிறது இவரது நிறுவனம்.

செய்திகளைத் தரம்பிரித்து, ஒரு அல்கோரிதம் (கணக்கிடும் முறை) வழியாக ஆராய்ந்ததில், அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள், மற்றும் இணையத்தில் புழங்கப்பட்ட, தேடப்பட்ட வார்த்தைகளை வைத்து, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மீது தெரிய வந்த ஆர்வம், அக்கறையை வைத்து, குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற இந்த நிறுவனம், தனது ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவித்திருக்கிறது.



இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி, முடிவுகள் எல்லாமே அமெரிக்காவை மையமாக வைத்து மட்டுமே தெரிவிக்கப் பட்டிருக்கின்றன என்றாலுமே கூட, ஊடகங்களில்வெளியாகும் செய்திகள், போக்குகள் என்று  பெரும்பாலானவற்றை அமெரிக்காவே ஆக்கிரமித்திருப்பதால், இந்த முடிவுகளை அப்படியே நமக்கு உதவாது, பொருந்தாது என்று ஒதுக்கி வைத்து விட முடியாது!

இந்த நிறுவனம், இந்தப் பத்தாண்டுகளில், மிகவும் முக்கியமான  நிகழ்வுகளாக, செய்தியாக, ஒரு பதினைந்து  விஷயங்களைத் தரவரிசைப் படுத்தியிருக்கிறது. அவை என்னென்ன, இந்தியச் சூழ்நிலைகளுக்கு, பொருளாதாரம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக எவைஎவை இருக்கும் என்பதைத் தொட்டுப் பேசுவதற்காக, இங்கே!


1.  சீனாவின்  எழுச்சி ! இதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும் செய்தியை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம், இணையத்தில், ஊடகங்களில் வாசிக்கப்பட்ட செய்தி! முதலிடத்தை பெற்ற சீனா, அடுத்த செய்தியைக் கூட வெகுவாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சத்தமே இல்லாமல், ஒரு செய்தி முக்கியமான இடத்தைப் பிடித்தது, ஜனங்களை ரொம்ப நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதைக் காட்டியதாகவும்ஆனது.
2.  ஈராக்குடனான  போர் ! சதாம் ஹுசேன் கதையை முடித்த இந்தப் போருக்கான முஸ்தீபு, செலவு, அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது தொடர்ந்ததில் ஏற்பட்ட அதிருப்தி! பேரழிவுக்கான ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருப்பதாக, அதைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்ற கதையில், சதாம் ஹுசேன் கதை முடிந்த உடன், பேரழிவுக்கான ஆயுதங்கள் என்று சொன்னது எதுவுமே இல்லை, ஒரு உக்கிரமான போருக்கு ஆயத்தப் படுத்துவதற்கான பிரச்சாரம் (கோயபல்ஸ் எல்லாம் பச்சா!) இப்படி, அமெரிக்கா முழுவதையுமே, நம்மூர் மெகா சீரியல்கள் மண்டைக்குள் புகுந்து ஆக்கிரமித்திருப்பதைப் போல், ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த செய்திகள்பயங்கரமான ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிய வந்தபோது, அமெரிக்க அதிபர் புஷ் கேலிக்குரிய பொருளாக மாறினது வரை, பரபரப்பான மெகா சீரியலாக ஓடியது!  


3.  செப்டம்பர் 11,2001 - நியூ யார்க்  நகரத்தின் மீது, பெண்டகன் மீது  ஒசாமா பின் லேடனின் விசுவாசிகள் நடத்திய தாக்குதல்! அமெரிக்கர்களுடைய மெத்தனத்தை, எங்களை மீறி, எதுவுமே நடக்காது என்றிருந்த ஆணவத்தை, உரசிப்பார்த்த நாள். இரண்டாம்  உலகப்போரில், பேர்ல் ஹார்பரில் ஜப்பானியத் தாக்குதலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கடற்படை வீர்கள், கப்பல்கள் சின்னாபின்னமான பிறகு, வெறியோடு எழுந்ததைப் போலவே, இந்தத் தாக்குதலும், வருகிற பத்தாண்டுகளில் அமெரிக்காவின் போக்கைத் தீர்மானிக்கும் என்பது மெல்ல மெல்லத் தெளிவாகி வருகிறது.இதில் நாம் என்ன நிலை எடுக்கப் போகிறோம் என்பது இன்னும் ஒரு ஒன்பது ரூபாய்  நோட்டுத் தான்!

4.  September 11-  தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தின் மீதான போரை அமெரிக்கா அறிவித்தது! இந்த பயங்கரவாதிகளை, தீவீரவாதக் குழுக்களைத் தன்னுடைய சுயலாபங்களுக்காக, சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக வளர்த்து விட்டதே அமெரிக்கா தான்! தீவீரவாதத்தின் ஊற்றுக் கண்களில் பிரதானமாக இருக்கும் பாகிஸ்தானுக்கு இன்னமும் உயிர், ஆயுதம், பணம் கொடுத்துக் கொண்டிருப்பதும் கூட அமெரிக்காதான் என்பதைக் கொஞ்சம் கவனமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
5.  மைகேல் ஜாக்சனின் மரணம்! வளர்ந்த வேகத்திலேயே, வால் நட்சத்திரம் போல தேய்ந்துபோன பரிதாபம்! மருந்து கூட விஷம் தான் என்பதைப் பாடமாகச் சொன்ன சேதி! ரசிகர்களின் இதயத்தில் ராஜாவாக இருந்தசெய்தி


6.  பாரக் ஹுசேன் ஒபாமா-இந்த கலப்பின அமெரிக்கர் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி! ஒரு கருப்பு நிறத்தவரை, தங்களுடைய அரசுத் தலைவராக ஏற்றுக்  கொள்வதில் அமெரிக்க மக்களுக்கு இன்னமும் இருக்கும் மனத் தயக்கத்தில், இது மிகவும் அதிசயமான செய்தி தான்!  

இர்விங் வாலஸ் எழுதிய "The Man" கதையைப் படித்திருந்தீர்களானால், ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பெரிய அதிசயம் தான் என்பதை ஒப்புக் கொள்வீர்கள்! கூடவே, அமெரிக்கர்கள் மாற்றங்களுக்கு அஞ்சுவதில்லை, மாற்றங்களுக்குத் தயாராகவே இருப்பவர்கள், அதனால் தான் இன்று வரை அவர்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்பதும், ஒரு தேசமாக எழுந்து நிற்பவர்கள் என்பதுமே புரியவரும்!

அப்புறம் சென்ற செப்டெம்பரில் அமெரிக்காவை உலுக்கியெடுத்த நிதித்துறை, வங்கி நிறுவனங்களின் சரிவு, பொருளாதாரம் உருகியது என்றோ, பொருளாதார சுனாமி என்றோ இருந்த நிலையில் இருந்து மீண்டுவருவதாகத் தோற்றமளிக்கும் நிலையில், துபாயில் கிளம்பியிருக்கும் பொருளாதார மணல் கோட்டை சரிந்து எழுந்திருக்கும் மணல் சூறாவளி! இன்னமும், உண்மையான மீட்சி வரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

காத்ரீனா புயல் அமெரிக்காவைத் தாக்கியது இரண்டு விதமாக! நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடந்த ஒன்று இயற்கையான பேரிடர்! அடுத்து, பாதிக்கப்பட்டது கருப்பர்கள் தானே என்று அரசு நிர்வாகம் காட்டிய அலட்சியம், நாங்களும் அமெரிக்கர்கள் தான் என்று அவர்கள் கதறியது!

கடல் கொந்தளித்தது! சுனாமியாக இந்தோனேஷியா முதல், இந்தியா இலங்கை என்று லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உடைமைகளைத் தோற்று நின்ற பெரும் சோகம்!

ஈராக்கில் முடிந்தது என்று நினைத்தால், ஆஃப்கானிஸ்தானில், எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அமேரிக்கா நடத்தி வரும் யுத்தம்!

சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் , சீன அரசு திட்டமிட்டு, பிரம்மாண்டமாக ஒலிம்பிக்ஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது! சீனாவை அயல்நாட்டு மூலதனமும், தொழில்களும் தேடி வருவதற்கான அடுத்த கட்ட அழைப்பாக!

தாலிபான்! உலக அமைதிக்குத் தொடர்ந்து சவால் விடும் பயங்கரவாதம்!

அமெரிக்க வீர்களது உயிர்களை மட்டுமல்ல, நேடோ கூட்டணி நாடுகளது படைவீரர்களது உயிர்களையும் பலி கொடுத்து, பல லட்சம் கோடி டாலர்களை அறிவிக்கப்பட்டதும், அறிவிக்கப்படாததுமான யுத்தங்களில்அமெரிக்கா கொட்டிக் குவித்துக் கொண்டிருந்த போதிலும், ஒசாமா பின் லேடனை, இன்னமும் பிடிக்க முடியாதது!

இவைதான், அடுத்துவரும் காலங்களில் உலக நிகழ்வுகளைத் தீர்மானிக்கப் போவதாக, இந்த ஆராய்ச்சிக் குறிப்பு சொல்கிறது
 
உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவதுகூட, நல்ல பொழுதுபோக்காகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க முடியும். அப்படி, உலக நடப்புக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும், தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் உங்களுக்கும் ஆர்வம் இருக்கும் என்றேநம்புகிறேன்! செவி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!
தொடர்ந்து பேசுவோம்!


8 comments:

  1. ஒவ்வொரு கட்டுரையையும் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். உங்களது ஒவ்வொரு கட்டுரையுமே இன்னொன்றிற்கு போட்டி என்று சொல்கிற விதத்தில் அழகாக எழுதுகிறீர்கள்.. இந்த மாதிரியான செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்ட பெரீய்ய பத்திரிகைகளை விட அதிகபட்ச விஷய ஞானத்தோடு உங்கள் Presentation நேர்த்தி அற்புதமாக இருக்கிறது. படத்தேர்வுகளும் அழகாக இருக்கிறது. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!

    என் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பது, சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பத்துப் பதினைந்து, மிஞ்சிப்போனால் இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளைத் தாண்டி இந்தப் பக்கங்களில் கூடவே வருகிற மூன்றில் இருந்து ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்பதை அறிந்தே இருக்கிறேன்.
    "உங்களது ஒவ்வொரு கட்டுரையுமே இன்னொன்றிற்கு போட்டி" என்று நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தை அனைத்துப் பதிவர்களுக்குமே பொருந்தும்!என்றாலும், I am trying to exceed myself என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தவிப்புத் தான் அது என்பதைப் புரிந்து கொள்கிறேன்!

    செய்திகள், வெறுமே படித்துவிட்டுக் கடாசிவிட்டுப்போய் விடுவது அல்ல! சில செய்திகள் உலகத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடியவை, நம்முடைய வாழ்வும் அவைகளில் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதற்காகவே, குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் தளத்தில் படித்த ஒரு அம்சத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதோன்றியது!

    ReplyDelete
  3. முக்கிய உலக நிகழ்வுகளில் ஜாக்‌சனின் மரணமும் இடம் பெற்றிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது!

    ReplyDelete
  4. வாலை இன்னமும் காணோமே என்று பார்த்தேன்!

    அதிகம் தேடப்பட்ட நபர், சம்பவம் என்று கூகிளிட்டுப் பாருங்கள்.

    ReplyDelete
  5. இன்று தான் உங்கள் தளத்தை வாசிக்கும் வாய்ப்பு, முதன் முறையாக கிட்டியது. அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான தளம்.

    ReplyDelete
  6. Really good compilation. The amount of work you have put in amazes me.

    ReplyDelete
  7. You are one of the few odd men among the ordinary bloggers who scrippe about the Movie and the scratching the people who is in the power. Yor daring exposer from the GHANTI issue to the Humitating defeat in the CHINEASE aggression etc., This blog too very informative rather than usual gossips. Keep it up.
    M.S.vasan

    ReplyDelete
  8. வாருங்கள் திரு. வாசன்!

    எரிதழலாய்க் கொதிக்க வேண்டும் என்று பதிவுலகத்திற்கு வந்தீர்கள் போல! அப்புறம் ஏன், ஒரு பதிவைக் கூடக் காணோம்?

    வித்தியாசமாக, சுயமாகச் சிந்தித்து எழுதுகிற தமிழ்ப் பதிவர்கள் இங்கே நிறைய உண்டு! என்னுடைய பல பதிவுகளில், இவர்களைப் பற்றிய குறிப்போ, இணைப்புச் சுட்டியோ, அல்லது எதிர்க் கருத்தோ ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும்,

    காந்தே என்ற பெயர், காந்தியாகிப் போனது ஆரம்ப நாட்களில் ஏமாற்றுவதற்காக அல்ல! காந்தி பெயரைக் கடைசியில் சேர்த்துக் கொண்டவர்கள் எவருமே காந்தியிடம் இருந்த நல்ல அம்சங்களை, உறுதியைக் கொண்டிருக்கவில்லை என்பது தான் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொண்ட கதையாகிப் போனது. இது இந்ததாய்த் திருநாட்டின் மிகப் பெரும் சோகம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!