மண்டேன்னா ஒண்ணு! மலைப்பாதை, கொஞ்சம் கடினம் தான்..!


சம்பக்லால் எனும் அடியவரை ஸ்ரீ அரவிந்தர் மார்புறத் தழுவும் ஓவியம்

நேற்றுமுன்தினம், பிரிவினையின் ஆறாத ரணங்களைத் தொட்டு ஒரு பதிவை எழுதியிருந்தேன்! ஆறாத ரணத்தில் இருந்து வடியும் குருதியும் சீழும் கலந்த மாதிரியான ஒன்றைக் காஷ்மீரில் சமீபத்தில் அதிகரித்து வரும் வன்முறை காட்டிக் கொண்டிருப்பதை, அது குறித்தான செய்திகளைப் படிக்க நேர்ந்தது. 

அரசியல் ரீதியாகத் தீர்வு காண முடியாத அல்லது தெரியாமல் இருக்கும்போது, அல்லது ராணுவரீதியான தீர்வுதான் என்று முடிவு செய்தால், அதற்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடிய political will என்று சொல்வோமில்லையா, அந்த உறுதி இல்லாதபோது, ஒரே வார்த்தையில் சொல்வதானால் "ரெண்டும் கெட்டானாக" இருக்கும் போது, (தனக்காகவும் தெரியாது, பிறர் சொல்லியும் ஏறாது) இதைவிட வேறெந்த உருப்படியான விளைவுகளையும் எதிர்பார்க்க முடியாது!

போன பதிவின் தொடர்ச்சியாக, பழைய பதிவின் ஒரு பகுதி இங்கே! ஸ்ரீ அரவிந்தரது வார்த்தைகள் கொஞ்சம் ஹைலைட் செய்யப்பட்டு, கொஞ்சம் யோசித்துப்பார்ப்பதற்காக!


"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம், உனக்குக் கிடைக்கும்" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எழுதியவர் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது. கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று ஆன்மீக வெள்ளப் பெருக்குகள், வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்று மூவருடைய தத்துவ தரிசனமும் ஒரே இடத்தில், கபாலி சாஸ்திரியாரிடத்தில் சங்கமித்ததைப் புரிந்து கொண்ட பிறகே, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டுமென்று திருவுள்ளம் போலும்!

தந்தை விஸ்வேஸ்வர சாஸ்திரி, மகனுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்கிறார். சாம வேத அத்யயனத்தையும் சொல்லி வைக்கிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபடுத்துகிறார். இதெல்லாம் பூர்வாங்கமே. தொடர்ந்த மந்த்ர ஜப சாதனையில் தன்னுடைய குருவாக, வாசிஷ்ட கணபதியைக் கண்டு கொள்கிறார், கபாலி சாஸ்திரி. வேதம், உபநிஷத்துக்களின் நுட்பத்தை எல்லாம் கணபதி முனிவரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, அவருக்கும் குருவான ஸ்ரீ ரமண மகரிஷியின், தரிசனமும் கையால் நெஞ்சத்தைத் தொட்டு, தகராகாசமாகிய இதயக் குகை இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஹஸ்த தீக்ஷையும் கிடைக்கிறது.

பகவான் ரமணரிடத்திலிருந்து கிடைத்த தத்துவ தரிசனமே, பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் சரணடைந்து, திரிவேணி சங்கமமாக, அற்புத ஒளி வெள்ளமாக சாஸ்திரியாருடைய யோக சாதனை பரிணமிக்கிறது.

ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது. ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை"

இப்படிச் சென்ற பதிவில், எழுதியிருந்தது, சரிதானா என்கிற விசாரமே இத்தனை நாள் மேலோங்கியிருந்தது. ரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?

இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே அனுபவத்தில் நாம் காணும் உண்மை அல்லவோ?

சின்ன நாயனா கபாலி சாஸ்திரியார் கண்டெடுத்த வைரம், திரு மாதவ் பண்டிட், ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

பாரதி அறிமுகத்துடன், மாலை ஆறுமணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடாகிறது. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கைகளிலேந்தி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, கற்றறிந்த இரு பண்டிதர்களுக்கிடையிலான மாதிரி வடமொழியில் உரையாட ஆரம்பமாகிறது. ஆங்கிலம் தெரியுமா என்று ஸ்ரீ அரவிந்தர் கேட்க, உரையாடல், பிறகு ஆங்கிலத்திலேயே தொடருகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள், அதன் விடுதலை சாத்தியத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. "சாத்தியமென்ன, அது சர்வ நிச்சயம்" என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். (இந்த சந்திப்பு)இது நடந்தது 1917 இல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1942 இல் 'வெள்ளையனே, வெளியேறு' என்று காந்தி இயக்கம் தொடங்கிய பிறகு தான், முழுமையான சுதந்திரத்திற்கான சுதந்திரப் போராட்டம் தொடங்கின மாதிரி ஒரு மாயை, இருக்கிறது. அதற்கும் முன்னாலேயே. வங்காளத்தில், ஸ்ரீ அரவிந்தர், நேதாஜி முதலானோர், முழு சுதந்திரத்திற்கான குரல் எழுப்பி இருப்பதை நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

அடுத்து, ஹிந்து முஸ்லிம் பிரச்சினை பற்றிக் கேள்வி திரும்புகிறது. ஒரு பரந்த மனத்தோடு கூடிய இந்துத்வமே தீர்வாக முடியும் என்று பதில் அளிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர்இன்றைக்கும் கூட, இந்த பதில் எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். முஸ்லிம்கள் என்றாலே, பாபரின் நேரடித் தோன்றல்களாக, அன்றைய காட்டுமிராண்டித்தனத்தை இன்றும் கைக்கொண்டிருப்பவர்களாகச் சித்தரித்து, பேதங்களை, பிரிவினையை, சச்சரவை வளர்த்துக் கொண்டிருக்கும் போக்கு, என்ன தீர்வைத் தந்திருக்கிறது?

இப்படி ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பு, பரவலாக நாடு அன்று எதிர்கொண்டிருந்த விஷயங்களைத் தொட்டுப் பேசி முடிகிறது. இன்னொன்றின் தொடக்கமாக, இந்த சந்திப்பு அச்சாரம் போட்டு வைக்கிறது!

சற்று விரிவாகவே, பார்ப்போம்!?"

எண்ணெய் மட்டுமல்ல தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது! திரு தி.சா.ராஜு அவர்களுடைய ஒரு சிறுகதையை மனித இயல்பின் காரணமில்லாத துவேஷத்தை அடிப்படையாக வைத்துச் சொல்லப் பட்ட கதையை இந்தப்பக்கங்களிலேயே கூடப் பார்த்திருக்கிறோம்! 

பாகிஸ்தான் அல்லது சீனாவைக் குறைசொல்வதற்கு முன்னால், நம்முடைய அந்தரங்க சுத்தியையும், நம்முடைய தலைவர்களுடைய யோக்கியதையையும்  ஒருமுறை சோதித்துக் கொள்வது மிகவும் நல்லது!





No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!