மிரளும் காங்கிரஸ்!அசட்டுத் துணிச்சலும் அயோக்கியக் கூட்டணியும்!




இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து வருபவர்களுக்கு, குறிப்பாக அரசியல்,பொருளாதாரம்,நாட்டு நடப்பு குறித்த பதிவுகளைப் படித்து வருபவர்களுக்கு, காங்கிரஸ் என்ற விஷ விருட்சம் எல்லா ஜனநாயக நடைமுறைகளையும், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு நச்சுச் சூழலைப் பரப்பிக் கொண்டு, தானும் மரணித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருப்பது புரியும், புரிந்து கொள்ள முடியும்!

தேச விடுதலைக்காகப் போராடிய காந்தி முதலான தலைவர்கள் இருந்த காங்கிரஸ் இல்லை இன்றிருப்பது! ஆயிரம் குறை சொல்ல முடிந்தாலும்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஆனால் அதைக் காப்பாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாமல் போன நேருவின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது!

சொந்த வாழ்க்கையிலேற்பட்ட அவலங்களால் சுற்றி இருப்பவர்கள் மீதிருந்த சந்தேகம், பேட்டை ரவுடியை விட மோசமாகத் தலை விரித்தாடிக் கொண்டிருந்த சஞ்சீவ் என்ற சஞ்சய் காந்தியின் மீதிருந்த குருட்டுத்தனமான பயம், அதோடு கலந்திருந்த பாசத்தினால், நாடாளு மன்ற நடைமுறைகள்,நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றையுமே சீரழித்த இந்திரா என்ற  நேருவின் மகள்   தலைமையில் கீழிருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது.


இப்போதிருக்கும் காங்கிரஸ், ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன ஒரு தலைமையின் கீழ்,தேசத்துக்கு எதிராகவே தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற தியாக சிகரத்தின் கைகளில் சிக்கியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு விவகாரமாக இருக்கட்டும்,அண்டைநாடுகளின் விஷமத்தை எதிர்கொ ள்வதிலாகட்டும் பிரச்சினைகளைத் தள்ளிப் போட்டே சாகடிக்கிற கையாலாதவர்களின் கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. இந்த தினமணி தலையங்கத்தை ஒரு முறை கவனமாகப் படித்துப் பாருங்கள்! 


காங்கிரசைத் தூக்கி எறிவோம் என்று உறுதி கொள்ளுங்கள்!



தினமணி தலையங்கம்: பொய் சொல்வது யார்?



முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் அளித்த பேட்டியில், புதிய அணைக்கான கருத்துரு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவிடம் செப்டம்பர் 29-ம் தேதி அளிக்கப்படும் என்று (செப்.20-ம் தேதி ) முன்பு அளித்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.

தற்போது அமைச்சரின் பேட்டி குறித்து கேரள பத்திரிகைகள், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது அவரும், "ஆய்வு குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ஆய்வு நடத்திய பிறகுதானே, புதிய அணைக்கான கருத்துருவே தயாரிக்க முடிந்தது' என்று கூறியுள்ளார். புதிய அணை அமையவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கே எந்தவொரு பணியை மேற்கொள்வதாக இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் நடத்த முடியாது.

"வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு நடத்த முடியும்? ஆய்வு நடத்தாமல் எப்படி டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜக்ட் ரிபோர்ட்) தயாரிக்க முடியும்?

2010-ம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) செய்யாமல் அனுமதி அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பிறகு இந்த மதிப்பீட்டைச் செய்யும் பணியை கேரள வனஆராய்ச்சிக் கழகத்திடம் அளித்தோம். அவர்களால் செய்ய இயலவில்லை. அதனால் இதைச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுபற்றி மத்திய அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று கேரள நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் வெளிப்படையாகப் பேட்டியளிக்கிறார்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகித்த காலத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக கேரள எம்.பி.க்கள் சொல்கின்றனர்.

ஜனவரி 2010-ல் வெளியான செய்திகளில், கேரள நீர்ப்பாசனத் துறை புதிய அணைக்கான சர்வே நடத்தி, தற்போதுள்ள அணைக்குக் கீழே 426 மீ, 627 மீ, 650 மீ அணைகள் கட்டும் ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், இந்த இடங்களில் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து அறிய இதன் மாதிரிகளை ஆய்வுக்காக லால்பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு கேள்விகளைத்தான் நாம் மத்திய அரசிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இத்தனை பணிகளும் நடந்திருக்க முடியுமா? அனுமதியின்றி நடந்திருக்குமேயானால், அதற்காக மத்திய வனத்துறை என்ன நடவடிக்கையை இந்த மாநில அரசின் மீது மேற்கொள்ளப் போகிறது?

இதைவிட முக்கியமாக இன்னொரு கேள்வி இருக்கிறது.

மத்திய வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இத்தகைய புதிய அணையைக் கட்டுவதால் பல்லுயிர் பெருக்கத்துக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாதா?

அணையின் நீரை 142 அடிக்கு உயர்த்தினால் அதனால் தேங்கும் அணை நீர்ப் பரப்பு பல ஆயிரம் ஏக்கர் அதிகரிக்கும். அப்போது பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டாகிலும் அணை நீரை 136 அடிக்கு மேலாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறையிட்டிருக்கும்போது, புதிய அணை கட்டுவதால் மட்டும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாதா? இதற்குக் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதிலளிக்கட்டும்.

புவிவெப்ப மாநாட்டு ஒப்பந்தத்தில், வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமா? அதற்கு மத்திய அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.

அந்த இடத்தில் புதிதாக அணை கட்டும் விவகாரத்தை கைவிடும் கோரிக்கையைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. புதிய அணையை ரூ.650 கோடிசெலவில் கட்டுவதற்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள். புதிய அணையைக் கட்டும்போது, முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியாக அளிக்கிறார்கள். உடைக்கப்படும் அணையிலிருந்து எந்தெந்தப் பகுதியை புது அணைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் பேசுகிறார்கள்.

இவ்வளவு நடக்கிறதே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பதில் என்ன? அணை கட்ட அனுமதி தருவாரா, மாட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும்!

பொய் சொல்வது யார், ஜெயந்தி நடராஜனா? 


உம்மன் சாண்டியா?


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!